சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு புறப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றில், விமானக் கேபினில் கரப்பான் பூச்சிகள் காணப்பட்ட சம்பவம் பயணிகளிடம் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள், தங்களது இருக்கைகள் அருகில் பூச்சிகள் காணப்பட்டதாக விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனே விமான ஊழியர்கள், அந்த பயணிகளை வேறு இடங்களுக்கு மாற்றி அமர்த்தினர்.
பின்னர், விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்திய போது, உடனடியாக உள்ளே முழுமையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்திலேயே பூச்சிகள் அகற்றப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனம், இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. மேலும், விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டிருக்கும்போது, வெளிப்புறத்திலிருந்து பூச்சிகள் உள்ளே நுழையும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
“வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் எப்போதும் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சம்பவம் நம்மால் கவனிக்கப்படும் முக்கியமான விடயமாகும்,” என ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது