(அபூ உமர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையின் 13வது ஆண்டு நினைவு தினமாகும் (2025.05.22). 1955ஆம் ஆண்டு பிறந்த மசூர் சின்னலெப்பை, 1994ஆம் ஆண்டு தனது 39வது வயதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் அரசியலில் தனது பயணத்தை தொடங்கினார்.
அவரின் தந்தையும் ஒரு முன்னணி அரசியல்வாதியாக இருந்ததோடு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகவும் பணியாற்றியிருந்தார். ‘சின்னலெப்பை சேர்மன்’ என்றழைக்கப்பட்ட அந்தத் தலைவர் போலவே, அவரது மகனும் பின்னர் அதே பதவியை வகித்தார்.
மசூர் சின்னலெப்பை ஆரம்பத்தில் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பின்னர் தவிசாளராகவும், மேலும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் ஐ.தே.க. கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளராகவும், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் பதவியில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியமை இவருடைய சமூக சேவையை முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது.
பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்த மசூர் சின்னலெப்பையின் அரசியல் வாழ்க்கை புதிய கட்டத்தை எட்டியது. அவரது தடம் விட்ட சாதனைகள் இன்று பலரால் நினைவு கூறப்படுகின்றன.
2012ஆம் ஆண்டு மே 22ஆம் நாளில், மசூர் சின்னலெப்பை 56வது வயதில் காலமானார். நேற்று, அவரது 13ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பலரும் அவரது சேவைகளையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
“அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க, அவருக்கு சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்”