Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் புள்ளிகளால் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் “செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” புதிய திட்டம் அறிமுகம்

Posted on August 15, 2025 by Admin | 76 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை இனி புள்ளிகள் (Points) அடிப்படையில் மதிப்பிட்டு, அதன்படி தரவரிசை (Rank) வழங்கும் திட்டத்தை, அரசியல் கட்சி வேறுபாடின்றி, எமது தெளிவு செய்தித்தளம் (www.thelivu.net) அறிமுகப்படுத்தவுள்ளது.

“செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம், ஊரின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் புதிய வழி வகுக்கும் என எமது செய்திக்குழு எதிர்பார்க்கின்றது.

புள்ளிகள் வழங்கப்படுவதற்கான நியதிகள்:-
1. சபை அமர்வுகளில் பங்கேற்பு
2. பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் முன்வைக்கும் பிரேரணைகள்
3. ஏற்றுக்கொள்ளப்படும் பிரேரணைகள்
4. விசேட கூட்டங்களில் பங்கேற்பு
5. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பு

மேலும், புதிய திட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்தல், மக்களுக்கு பாதகமான விடயங்களை எதிர்த்தும் சாதகமான விடயங்களை ஆதரித்தும் விவாதித்தல், கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டு முயற்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுத்தம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், புதுமையான யோசனைகள், குழு ஒத்துழைப்பு, ஒழுக்கம் போன்ற அம்சங்களும் மதிப்பீட்டில் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இணைக்கப்படும்.

இம் முறைமை, உறுப்பினர்களுக்கு பொறுப்புணர்வை அதிகரிப்பதோடு “தங்களின் செயல்பாடுகள் புள்ளிகளால் அளவிடப்படும்” என்பதை அறிந்திருப்பதால், அலட்சியம் குறைந்து செயல்திறன் உயரலாம். உறுப்பினர்களின் தரவரிசை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்படுவதால், மக்கள் நம்பிக்கை மேலும் உறுப்பினர்களின் மீது வலுவடையும்.

இத்திட்டத்தின் மூலம், வீதிகள் அமைத்தல், தெருவிளக்கு பொருத்தல், கழிவு அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகள் விரைவாக மக்களுக்கு கிடைக்கும். திட்டங்கள் தாமதமின்றி நிறைவேற வாய்ப்புகள் அதிகரிக்கும். மக்களின் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்படும் மற்றும் சபை உறுப்பினர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து கருத்துக்களை அறிந்து செயல்படும் சூழல் உருவாகுவதுடன் மக்கள் பங்கேற்பு அதிகரிப்பதால், ஊரின் வளர்ச்சி திட்டங்களில் அனைவருக்கும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

முன்னாள் காலங்களில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட சில உறுப்பினர்கள் மக்களின் நலனை புறக்கணித்து, பதவிக் காலத்தை வீணடித்ததாக மக்கள் விமர்சித்தது மறக்க முடியாது. ஆனால், தற்போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மக்களின் நலனை முன்னிறுத்தி பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது.

“ஒவ்வொரு புள்ளியும், ஒவ்வொரு தரவரிசையும் நமது பிரதேசங்களையும்(அட்டாளைச்சேனை ,பாலமுனை,திராய்க்கேணி, ஒலுவில், தீகவாபி) நமது மக்களையும் முன்னேற்றப் பாதையில் நடத்தும் ஒரு படி” என எமது தெளிவுக் குழு நம்புகிறது