காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், அரச எரிபொருள் வவுச்சர் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி தனது பொறுப்பில் இருந்த பொலிஸ் ஜீப் வாகனத்திற்கும், ஜெனரேட்டரிற்கும் எரிபொருள் பெறுவதற்காக வழங்கப்பட்ட வவுச்சரை எரிபொருள் நிலையத்தில் வழங்கியுள்ளார். அதில் ஜீப் வாகனத்திற்கு 12,400 ரூபா மதிப்பிலான டீசலை நிரப்பிக் கொண்ட அவர், ஜெனரேட்டருக்கான 6,600 ரூபா பெறுமதியான எரிபொருளை பெறாமல், அந்தத் தொகையை பணமாக பெற்றுக்கொண்டதாக புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினரால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போதே மோசடி உறுதிசெய்யப்பட்டதால், 38 வயதுடைய சாரதி கடந்த சனிக்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவரை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.