இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, மருதமுனை பகுதியில் அமைந்திருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் , வழக்கு தொடர்பாக ரூ.2,300 இலஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மறைமுகமாக விசாரணை நடத்தியபோது, நீதிபதியும், அவரின் மனைவியும் இலஞ்சம் பெற்ற தருணத்தில் கைது செய்யப்பட்டனர்.
கைதான இருவரும் நேற்று (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைகளின் பின்னர், அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.