(அபூ உமர்)
பாலமுனையில் தற்போது ரக்பி விளையாட்டுக்காக வீரர்கள் பயிற்சி பெற்று வரும் மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய முழுமையான ரக்பி மைதானமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை விளையாட்டுத்துறை அமைச்சின் திருத்தச் சட்ட மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
“விளையாட்டுகள் என்பது சமூக முன்னேற்றத்திற்கும் இளைஞர்களின் வளர்ச்சிக்கும் முக்கிய தளமாகும். குறிப்பாக தைரியம், ஒற்றுமை, உடல் வலிமை ஆகியவற்றை மேம்படுத்தும் ரக்பி விளையாட்டு, இன்று சர்வதேச ரீதியில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை, நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
பாலமுனை பிரதேசத்தில் 2011ஆம் ஆண்டு அறிமுகமான ரக்பி விளையாட்டு, இன்று பாடசாலை மாணவர்கள் முதல் கழக வீரர்கள் வரை பலரின் பங்கேற்பால் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. 2024இல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாகாண சாம்பியனாகவும், 2023–2025 காலப்பகுதியில் பாலமுனை விளையாட்டுக் கழகம் பல்வேறு மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் சாதனைகளைப் படைத்துள்ளது.
ஆனால், உரிய மைதான வசதி இல்லாததால் வீரர்கள் தற்போது கிரவல் தரையில் பயிற்சி மேற்கொள்வதால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும், மாணவர்களும் வீரர்களும் பல மைல்கள் தூரம் பயணம் செய்து திருகோணமலை கந்தளாய் லீலா ரத்ன மைதானத்தில் பயிற்சி பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
எனவே, பாலமுனையில் தற்போது ரக்பி விளையாட்டுக்காக வீரர்கள் பயிற்சி பெற்று வரும் மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய முழுமையான ரக்பி மைதானமாக அபிவிருத்தி செய்ய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.