அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் சாயம் பூசி முன்னெடுக்கப்பட்டால், அவை ஒருபோதும் வெற்றியளிக்காது என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஐ.ஏ. ஸிறாஜ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் 2025.08.20ம் திகதி நடைபெற்றபோது அவர் உரையாற்றினார்.
“மக்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை புறக்கணித்து, அரசியல் சாயம் கொண்டு செயல்படுவது எந்த வேலைத்திட்டத்தையும் பூரணமாக்காது. தவிசாளர் அவர்கள் அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பதை நான் பாராட்டுகிறேன். தூய்மையான எண்ணங்களுடன் செயல்பட்டால், இறைவன் அருளால் திட்டங்கள் நிச்சயமாக வெற்றியடையும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், PSGD திட்டத்தின் கீழ் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை உள்ளூர் உறுப்பினர்கள் மேற்பார்வை செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற தவிசாளரின் வேண்டுகோளை வரவேற்று பாராட்டியதோடு, வேலைத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் உறுப்பினர்களுக்கு பகிரப்பட்டால் அவை விரைவாக நிறைவு பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.