கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்துக்கு தீர்வு காண இன்று (24) தொலைத்தொடர்பு மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் விசேட கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் நாடு முழுவதும் தபால் அலுவலகங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, விடயத்தை அமைச்சருடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பல ஊழியர்கள் மீண்டும் பணியில் இணைந்துள்ளதால், நாளைக்குள் தபால் சேவைகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை தபால் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.