(மக்கள் குரல்)
அக்கறைப்பற்று பிரதேசத்தின் முக்கியமான பொதுப் போக்குவரத்து மையமாக விளங்கும் அக்கறைப்பற்று பஸ் தரிப்பிடமானது முன்னாள் அமைச்சரும் தற்போதைய முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் முயற்சியால் அழகிய வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், இன்று அந்த பஸ் நிலையத்தின் நிலைமை மக்கள் மனதில் கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுப் பயணிகள் ஓய்வு எடுக்கும் இடம், காத்திருக்கும் பகுதிகள் அனைத்தும் முறையற்ற வகையில் தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாக (parking area) பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு இடையூறாக, இருசக்கர வாகனங்களும், சில சமயங்களில் முச்சக்கர வாகனங்களும் கூட அந்த இடங்களில் தரித்து வைக்கப்படுகின்றன.
பயணிகள் தெரிவித்ததாவது:
“பஸ் தரிப்பிடத்தில் ஓய்வு எடுக்கவே இடமில்லை. வாகனங்கள் இடம் பிடித்துள்ளதால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவருக்கும் சிரமமாக உள்ளது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”
பொதுமக்களின் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் இந்த முறையற்ற நிறுத்துமுறை தொடர்வதால், பஸ் நிலையத்தின் பொதுப் பயன்பாட்டு தன்மை பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கடும் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.
அக்கறைப்பற்று பஸ் தரிப்பிடம், தினசரி அனைத்து இனத்தவரும் பெருமளவில் பயன்படுத்தும் முக்கிய இடமாக இருப்பதால், அங்கு ஏற்படும் சிரமங்கள் சமூக ஒற்றுமையையும், பொதுச் சேவைகளின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடியதாக மாறியுள்ளது.
பயணிகள் சுமுகமாக பஸ்களை காத்திருக்கவும், பாதுகாப்பான முறையில் ஓய்வு எடுக்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு, அங்கு தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க மாநகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, பொறுப்பான அதிகாரிகள், குறிப்பாக மாநகர முதல்வர், பிரதிமுதல்வர் மற்றும் உறுப்பினர்கள், விரைவாக தலையிட்டு அக்கறைப்பற்று பஸ் நிலையத்தை மீண்டும் அதன் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.