கோஸ்டாரிகாவில் அரிதான செம்மஞ்சள் சுறா கண்டுபிடிப்பு!
கோஸ்டாரிகா நாட்டின் டோர்டுகெரோ தேசிய பூங்கா அருகே உள்ள கடற்கரையில், உள்ளூர் மீனவரின் வலையில் சிக்கிய சுறா உலக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காரணம் அந்த சுறா வழக்கமான சாம்பல் அல்லது நீல நிறத்தில் இல்லை,மாறாக, முழுவதும் பிரகாசமான செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்தில் காணப்பட்டது.
விஞ்ஞானிகள் தெரிவிப்பதாவது, இந்த அபூர்வ நிற மாற்றத்திற்கு “சாந்திசம்” (Xanthism) எனப்படும் மரபணு நிலையே காரணம்.
இந்த நிலையில், கருமையான நிறமிகள் குறைந்து, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்கள் தீவிரமாகத் தெரியும். இதனால், சுறா பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் தோன்றுகிறது.
மேலும் ஆச்சரியம் அளிப்பது, இந்த சுறாவின் வெள்ளையான கண்கள். இது அல்பினிசம் (Albinism) எனப்படும் மற்றொரு மரபணு குறைபாடு இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
அல்பினிசம் என்பது மெலனின் என்ற நிறமியின் குறைவால் தோல், முடி, கண் போன்றவற்றில் நிறமின்மை தோன்றும் ஒரு நிலை.உலகின் கடல்சார் உயிரியல் வரலாற்றில் இதுபோன்ற சுறா இதுவரை பதிவு செய்யப்படாததால், இந்த கண்டுபிடிப்பு கடல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.