அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், அரச நிறுவனத் தலைவர்களின் பணிப் பயணங்களை எளிதாக்கும் நோக்கில் 2,000 கெப்ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் விளக்கமளித்தபோது, “கிராம மட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த, மாகாண அரசின் அதிகாரிகள் நேரடியாக கிராமங்களுக்கு சென்று மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதனால் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இவ்வாகனங்கள் கொண்டுவரப்படும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், செயலற்ற நிலையில் உள்ள சில உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளை மீண்டும் சுறுசுறுப்பாகச் செய்ய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்து வாழ்வாதார முன்னேற்றத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.