Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

விபத்துகளினால் ஆறு மாதங்களில் 1,332 பேர் பலி

Posted on September 6, 2025 by Admin | 113 Views

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாத இறுதி வரை, நாடு முழுவதும் பதிவான 1,256 கோர விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரும் பேருந்து விபத்தாக 2005 ஏப்ரல் 27 ஆம் திகதி குருநாகல்–கொழும்பு பிரதான வீதியில் உள்ள யாங்கல்மோதர தொடருந்து கடவையில் நிகழ்ந்த விபத்து கருதப்படுகிறது. அப்போது, கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து கவனக்குறைவாக தொடருந்துப் பாதையில் நுழைந்த நிலையில், கண்டி நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்துடன் மோதியது. அந்த பேரழிவில் 41 பேர் பலியானதோடு, 35 பேர் படுகாயமடைந்தனர்.

அதன்பின் பல பேருந்து விபத்துகள் இடம்பெற்றிருந்தாலும், யாங்கல்மோதர விபத்தின் தீவிரத்தை எட்டாத நிலையில், சமீபத்திய சில விபத்துகள் மீண்டும் நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

2023 ஆம் ஆண்டு வீதி விபத்துகளில் 2,341 பேர் உயிரிழந்த நிலையில், 2024 இல் இது 2,521 ஆக உயர்ந்தது. 2025 இன் முதல் ஆறு மாதங்களிலேயே 1,332 மரணங்கள் பதிவாகியிருப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

பொது போக்குவரத்து தொடர்பான விபத்துகளில், தனியார் பேருந்துகளில் 60 பேரும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2025 மே 11 ஆம் திகதி ரம்பொட–கெரண்டியெல்லப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் பலியாகி, 35 பேர் காயமடைந்தது. இது நாட்டின் அண்மைய வரலாற்றில் மிகக் கடுமையான பேருந்து விபத்துகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், நேற்றிரவு எல்லா–வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 15 பேர் பலியானதோடு, 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துகளுக்கான முதன்மை காரணம் சாரதிகளின் கவனக்குறைவாகக் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சில சந்தர்ப்பங்களில் பேருந்துகளின் இயந்திரக் கோளாறுகளும் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.