(அபூ உமர்)
அம்பாறை மாவட்ட நுரைச்சோலையில் சவூதி அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சு, வீடமைப்பு அமைச்சுகள் ஒன்றிணைந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்க வேண்டும் என நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் குறைநிரப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
2004 டிசம்பர் 26ஆம் திகதி சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்காக சவூதி அரசாங்கம் 1000 கோடி ரூபாய் நிதியில் 500 வீடுகளும், பாடசாலை, வைத்தியசாலை, பள்ளிவாசல், சந்தை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு கிராமமும் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 2009ஆம் ஆண்டில் நிர்மாணித்தது. ஆனால், அந்த வீடுகள் இதுவரை மக்களுக்கு வழங்கப்படாமல் 20 ஆண்டுகளாக பாழடைந்து நிற்கின்றன.
இது தொடர்பில் சவூதி தூதுவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் ஆகியோரை சந்தித்து வீடுகளை விரைவில் மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன் மேலும் 500 வீடுகளை கட்டித் தர தாம் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இதேவேளை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் வாய்மூல கேள்விக்கு பதிலளித்த கௌரவ பிரதம மந்திரி அவர்கள் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பில் தேசிய இன விகிதாசாரத்தில் வீடுகளை பங்கிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அம்பாறை மாவட்ட இன விகிதாசார அடிப்படையில் இந்த 500 வீடுகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் அம்பாறை மாவட்ட இன விகிதாசார அடிப்படையில் இந்த 500 வீடுகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்றக் குழுவின் மூலம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் நீதிமன்றத் தீர்ப்பினை நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திற்கு மாத்திரம் அமுல்படுத்தாமல் நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும். நமது நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு காணி கிடைக்க வேண்டுமாக இருந்தால் நுரைச்சோலை நீதிமன்றத் தீர்ப்பை நாடு பூராகவும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் ஆண்டுதோறும் வீடுகளை வழங்குமாறு ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.