ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை வரலாற்றிலேயே அதிகபட்சத்தை எட்டியுள்ளது. ஜப்பான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நூற்றாண்டு வாழ்வோரின் எண்ணிக்கை 1 லட்சம் என்ற மைல்கல்லை நெருங்கி வருகிறது.
செப்டம்பர் 1 நிலவரப்படி, இந்நாட்டில் 99,763 பேர் 100 வயதைக் கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4,644 அதிகம். இவர்களில் சுமார் 90 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
114 வயதான ஷிகெகோ ககாவா, நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர், தற்போது ஜப்பானின் அதிக வயதுடைய நபராக உள்ளார். அவர் 80 வயது வரை மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணராக பணியாற்றினார். “நோயாளிகளைச் சந்திக்க நடப்பது என் கால்களை வலிமையாக்கியது. அதுவே என் நீண்ட ஆயுளின் ரகசியம்,” என அவர் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
இதேவேளை, உலகின் மிக அதிக வயதுடைய நபர் பிரிட்டனைச் சேர்ந்த எதெல் கேட்டர்ஹாம் ஆவார். அவர் கடந்த ஆகஸ்டில் 116 வயதை எட்டினார். இதற்கு முன்பு, பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் உலகின் முதியவராகப் பெயர் பெற்றிருந்தது.