Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பாலஸ்தீன மக்களின் அரச உரிமைக்கு இலங்கை ஆதரவு

Posted on September 13, 2025 by Admin | 240 Views

பாலஸ்தீனப் பிரச்சினைக்கான அமைதித் தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயல்படுத்தும் நோக்கில், “நியூயோர்க் பிரகடனம்” எனப்படும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த முயற்சியை இலங்கை வரவேற்று, அதற்குத் தலைமை தாங்கிய சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமையை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட 142 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 10 நாடுகள், அதில் இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்கா உள்பட, எதிராக வாக்களித்துள்ளன. மேலும் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த பிரகடனம், ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியா மற்றும் பிரான்சின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஏழு பக்கத் தீர்மானத்தின் அடிப்படையில், இப்போது நியூயோர்க் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில், பாலஸ்தீனத்தை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தயாராகி வரும் சூழலில், இந்தத் தீர்மானம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் ஐ.நா பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.