நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற சிக்கல்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எந்தவித தாமதமின்றி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான பிரேமசிறி மானகே கருத்து தெரிவிக்கையில்,
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து முக்கிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து இந்த அரசாங்கத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்வது சட்டவிரோதமானது என சித்ரசிறி குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை பதில் கிடைக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது மாதாந்த ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 330 ஆகும்.மறைந்த முன்னாள் எம்.பிமார்களின் மனைவிமார் 182 பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இதற்காக அரசாங்கம் மாதந்தோறும் 23.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவழித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன