இலங்கையின் பல கடற்கரைப் பகுதிகளில் இன்று (24.09.2025) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்புடன், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
மேலும், நீர்கொழும்பு முதல் பொத்துவில் வரை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீட்டர் உயரமுள்ள அலைகள் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் www.meteo.gov.lk இணையதளம் மற்றும் 117 அவசர தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.