(அபூ உமர்)
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு, வெற்றிட நிரப்புதல் மற்றும் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை
18,000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நீண்டகால நிலுவையில் உள்ள பதவி உயர்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், வெற்றிடமாகவுள்ள உள்ள பணியிடங்களை நிரப்பவும், மேலும் தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து கடிதங்களும் தமிழ் மொழியில் அனுப்பப்பட வேண்டும் எனக் கோரி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைச்சரின் உடனடித் தீர்வு வழங்கப்பட்டது.
இன்று (24.09.2025) பாராளுமன்ற கட்டிடத்தில் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே தலைமையில் நடைபெற்ற கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் இது பற்றி கலந்துரையாடப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் வறுமையை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதுவரை பதவி உயர்வு பெறாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கவலை வெளியிட்டார். மேலும், வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமையும், தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்படுவதால் மக்கள் சிரமமடைவதும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பன்னலகே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, உத்தியோகத்தர்களின் பதவி உயர்வை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், சமூர்த்தி அதிகார சபையினால் தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் இனிமேல் தமிழ் மொழியிலும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
சமூர்த்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் அமைச்சரின் வினாவிற்கு விடையளிக்கையில் “தமிழ் மொழிபெயர்ப்பாளர் நியமனம் இல்லாத காரணத்தால் கடிதங்கள் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்பட்டன” என விளக்கமளித்தார். இதற்கு அமைச்சர், ஒப்பந்த அடிப்படையிலாவது தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்குமாறு அறிவுறுத்தினார்.
மூன்று முக்கிய கோரிக்கைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அமைச்சர் பன்னலகே அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.