கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள சம்பத் மனம்பேரி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றியவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ஷவின் உரைக்குப் பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். கொள்கலன்கள் தொடர்பான முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை செய்து வருவதாகவும், போதைப்பொருள் தொடர்பில் மொட்டுக் கட்சியினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சம்பத் மனம்பேரி போதைப்பொருள் தொடர்பில் தொடர்புடையவர் என்பது வெளிப்படை. இதுபோன்று பலர் மொட்டுக் கட்சியோடு தொடர்புடையவர்களாக இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தான் மக்கள் அந்தக் கட்சியை விரட்டிவிட்டனர். நாட்டிற்குள் போதைப்பொருளை கொண்டுவந்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியும்,” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நீண்டகாலமாக அரசியல் ஆதரவுடன் பாதாள உலகக் குழுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் மூலமாக போதைப்பொருள்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, இளைஞர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதில் தலையிட்ட நாமல் ராஜபக்ஷ, “சம்பத் மனம்பேரி தேர்தலில் போட்டியிட்டவர். அவருக்கு குற்றத் தொடர்பு இருந்தால் அதிகபட்ச தண்டனை வழங்குங்கள். அதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் வேண்டும்,” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், உங்களைப் போன்று நாங்கள் போதைப்பொருள் வர்த்தகத்தையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் கட்டியணைத்துக் கொண்டிருக்கவில்லை. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சோதனைகள் நடத்தியதாகவும், “நாங்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கவில்லை. குற்றவாளிகளுக்கு எதிராகவே எங்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.