கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகமாக முடிந்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட நால்வர் மீது கரூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கட்சித் தலைவர் விஜயும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றம், முன்னர், வெற்றிக் கழக கூட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கட்சித் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. இதனாலேயே விஜய் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா உலகில், ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் வெளியீட்டின் போது ஐதராபாத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்னமும் நினைவில் உள்ளது. அதேபோன்று, இந்த நிகழ்விலும் கட்சித் தலைவரின் மீது பொறுப்புத்தன்மை வைக்கப்பட வாய்ப்பு அதிகம் என மதிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவத்தை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மத நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் காரணமாக பல உயிரிழப்புகள் முன்னதாக நிகழ்ந்துள்ளன. ஆனால், அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகள் நிகழ்வது இதுவே முதல் முறை என குறிப்பிடப்படுகிறது.
இதேபோல், 2022-ம் ஆண்டு ஆந்திர மாநில நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.