Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

நாவலடி வட்டையில் முஸ்லிம் விவசாயிகளின் காணிகளில் வெளிநபர்கள் அத்துமீறி விவசாயம் செய்வது பெரும் அநீதி என உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

Posted on October 3, 2025 by Admin | 97 Views

(இறக்காமம் செய்தியாளர்)

அம்பாறை மாவட்டம் இறக்காமம் நாவலடி வட்டையில் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் விவசாயிகளின் நிலங்களில் வெளிநபர்கள் அனுமதியின்றி விவசாயம் செய்வது பெரும் அநீதி என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுப்பத்திரங்களின் அடிப்படையில் 21 முஸ்லிம் விவசாயிகள் தலா 2 ஏக்கர் வீதம் நிலங்களைப் பெற்று 40 ஆண்டுகளாக உழுது வந்ததாக குறிப்பிட்டார். இருப்பினும், சமீபத்தில் அவர்களுக்கே சொந்தமான நிலங்களில் வெளிநபர்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அநீதி என அவர் வலியுறுத்தினார்.

உதுமாலெப்பை எம்பி மேலும் தெரிவித்ததாவது:

“இந்த விவகாரம் குறித்து பல தடவைகள் அதிகாரிகளிடம் தீர்வு கோரினோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் 21 முஸ்லிம் விவசாயிகளுக்குரிய காணிகளை வழங்குமாறு தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தபோதிலும் வெளிநபர்கள் வந்து அந்த நிலங்களில் விவசாயம் செய்வதை அனுமதிப்பது ஏற்க முடியாதது. புதிய அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும். இல்லையெனில் நான் பாராளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்புவேன்.”

இதற்கிடையில் கூட்டத்தில் கலந்து கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ இந்த விவகாரம் குறித்து ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“உத்தரவுப்பத்திரம் பெற்ற முஸ்லிம் விவசாயிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கையில் ஏன் வெளிநபர்கள் அங்கு விவசாயம் செய்ய வேண்டும்?” என அவர் தமண பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.

தமண பிரதேச செயலாளர் அளித்த விளக்கத்தில், “முஸ்லிம் விவசாயிகளுக்குரிய நிலங்களில் மட்டுமே வெளிநபர்கள் விவசாயம் செய்ய விரும்புகின்றனர்” என தெரிவித்துள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த உதுமாலெப்பை எம்பி, முஸ்லிம் விவசாயிகள் தங்களுக்கு உத்தரவுப்பத்திரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலங்களை மட்டுமே விரும்புகிறார்கள், வேறு நிலங்கள் ஏற்க முடியாது என வலியுறுத்தினார்.

கூட்டத்தின் இறுதியில், நாவலடி வட்டை நிலப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தீர்வு காண தீர்மானிக்கப்பட்டது.