(பாலமுனை செய்தியாளர்)
இஸ்ரேலின் இடையறாத தாக்குதல்களால் துன்புறும் காஸா மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பாலமுனை இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் பிரதேசத்தின் பல சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று (வெள்ளி) ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு பெரும் உணர்வுபூர்வ பேரணியை முன்னெடுத்தன.
பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பித்த இப்பேரணி பிரதான வீதியை நோக்கி நகர்ந்தது. பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய பொதுமக்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கொடூர செயற்பாடுகளை எதிர்த்து குரல் கொடுத்ததுடன், மௌலவி சாஜித் ஹூஸைன் அவர்களின் சிறப்பு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இப்பேரணியில் பெருந்திரளான பொதுமக்களுடன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவரும் அம்பாறை மாவட்டத் தலைவருமான ஐ.எல்.எம். காஸீம் சூரி, பிரதேச சபை உறுப்பினர்கள், பல உலமாக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு பாலஸ்தீன் மக்களுக்கான ஒற்றுமையை வெளிக்காட்டினர்.