முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டுத் துளைக்காத வாகனம் அதிகாரப்பூர்வமாக திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து செப்டம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் திருப்பி வழங்குமாறு அறிவித்தது. அதன் அடிப்படையில், குண்டுத் துளைக்காத வாகனமும் நேற்று (3) திருப்பி கையளிக்கப்பட்டது,” என குறிப்பிட்டார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரியின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மனோஜ் கமகே எச்சரித்துள்ளார்.
“அடுத்த வாரம், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகளை சந்தித்து, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்குத் தேவையான வாகனங்களை மீண்டும் வழங்குமாறு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுப்போம்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்