தமிழ் இனத்தின் வலிகளை உண்மையாக புரிந்துகொண்டு தமிழர் சார்பில் செயல்படும் ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமராக நான் இருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஆனால், “அப்படி ஒரு அரசாங்கம் வருவது நிச்சயமில்லை. இருப்பினும் அது நிகழவேண்டும் என்பதே எனது ஆழ்ந்த ஆசை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
விழுதுகள் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துகளை வெளிப்படுத்தினார்.
“நாமல் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என சிலர் கூறுகின்றனர். அதோடு நாமலுடன் நான் இணைந்துவிட்டதாக சில வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால் நாமல் எமது இனத்தின் எதிரி. அவரின் அரசியல் தமிழர்களுக்கான நலனில் இல்லை. அவருடன் நான் இணைவது என் இனத்துக்கும் என் தந்தைக்கும் மிகப் பெரிய துரோகம் செய்வதற்கு சமம்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “தற்போதைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியில் சுகாதார அமைச்சு பதவியைக் எனக்கு கொடுக்கும் நிலை காணப்படுகிறது” என இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்