நாட்டின் பல பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் ஏற்படக்கூடிய கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக உயிர் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மின்னல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, திறந்த இடங்களில் தங்காமல் பாதுகாப்பான இடங்களில் இருப்பது அவசியம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.