ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரெட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள் உலகளவில் மிக உயர்ந்த கௌரவ விருதாக கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி என ஆறு துறைகளில் தலைசிறந்தோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவ்வாண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் இன்று தொடங்கி அக்டோபர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அதில் அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பல நாடுகளை மறைமுகமாக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-செர்பியா, கொங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆர்மீனியா-அஜர்பைஜான் பல நாடுகளுக்கு இடையிலான போர்களை தாம் நிறுத்தியதாக கூறி வருகிறார். குறிப்பாக இந்தியா–பாகிஸ்தான் மோதலை தாம் முடிவுக்கு கொண்டுவந்ததாக பலமுறை தெரிவித்துள்ளார்.
மேலும், யுக்ரைன்–ரஷ்யா மற்றும் காசா–இஸ்ரேல் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் எடுத்த முயற்சிகளுக்காகவும் நோபல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்புக்கான பரிந்துரையை பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகள் ஆதரித்து, நோபல் குழுவுக்கு பரிந்துரைக் கடிதங்களையும் அனுப்பியுள்ளன. எனினும், அவருக்கு விருது கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
நோர்வே அமைதி ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நினா கிரேகர், “ட்ரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு” என கூறியுள்ளார்.
அதே சமயம், ட்ரம்ப் கல்வி சுதந்திரங்களை கட்டுப்படுத்தியதாக நோபல் குழு உறுப்பினரொருவர் கூறியிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.
இந்தாண்டு நோபல் அமைதி விருதுக்கான 338 பேர் பட்டியலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேட்டோ, ஹாங்காங் ஆர்வலர் சௌ ஹாங்-டங், கனேடிய மனித உரிமை வழக்கறிஞர் இர்வின் கோட்லர் ஆகியோர் அடங்குவர்.
ட்ரம்ப் பெயர் ஜனவரி 31க்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டதால், அது 2025 விருதுக்கான தகுதியை இழந்ததாக நோபல் விதிகள் குறிப்பிடுகின்றன. எனவே, அவரது பெயர் 2026 பட்டியலில் மட்டுமே கருதப்படும் என கூறப்படுகிறது.
ட்ரம்புக்கு நோபல் வழங்கப்படாவிட்டால், அமெரிக்கா–நோர்வே உறவுகள் சிக்கலடையக்கூடும் என ஊகங்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே அமெரிக்கா விதித்த 15% வரி சுமையுடன் போராடும் நோர்வேக்கு இது கூடுதல் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், நோபல் அமைதி விருது யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ட்ரம்ப் பெயர் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.