உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரிதான மற்றும் அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தைச் சேர்ந்த மீராஜ் என்ற நபர், “என் மனைவி நசீமுன் இரவு நேரங்களில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க முயற்சிக்கிறாள்” என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டார்.
சமதான் திவாஸ் எனப்படும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழக்கமாக மின்சாரம், சாலை, ரேஷன் கார்டு போன்ற பிரச்சினைகள் குறித்து மக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பது வழக்கம். ஆனால், மீராஜின் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் மேலும் கூறியதாவது: “என் மனைவி பலமுறை என்னைக் கொல்ல முயற்சித்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் நான் திடீரென விழித்தெழுந்ததால் உயிர் தப்பியுள்ளேன். அவள் என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள். நான் தூங்கும்போது எப்போது வேண்டுமானாலும் என்னைக் கொல்லக்கூடும்,” என புலம்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். துணை நீதிபதி மற்றும் பொலிஸாருக்கு விசாரணை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில், இது மனநல பிரச்சினை அல்லது குடும்ப உளவியல் மோதலாக இருக்கலாம் எனக் கருதி பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த வினோதமான புகார், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கு காரணமாகியுள்ளது.