புதிய வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் பணியில் ஏற்பட்ட தாமதம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அவர் வாய்மொழிக் கேள்விக்கு பதிலளிக்கும் போது, 2025 செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான கணக்குப்படி மொத்தம் 165,512 வாகனங்களுக்கு இலக்கத்தகடுகள் வழங்கப்படாமல் உள்ளன எனத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“வாகன இலக்கத்தகடுகளை வழங்கும் பணியில் திட்டமிட்டதை விட நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய இலக்கத்தகடுகளில் ஏழு (07) சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை சோதனை செய்ய மொரட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தோம். பல்கலைக்கழகம் சுமார் மூன்று மாதங்கள் எடுத்தது; ஆனால் ஏழில் ஆறு அம்சங்களையே சோதனை செய்ய முடியும் என தெரிவித்தது. இதனால் ஏழாவது சோதனையை சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதுவே தாமதத்திற்கான முக்கிய காரணம். எனினும், பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.”
மேலும், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினையும் எதிர்வரும் அக்டோபர் 18ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.