Top News
| இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன நியமனம் | | உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு? | | அக்கரைப்பற்று பொதுச் சந்தை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம் |
Jul 27, 2025

பிரதமர் பதவிக்காக பிமல் ரத்நாயக்கவின் பெயர் பரிந்துரை – உதய கம்மன்பில

Posted on June 1, 2025 by Admin | 126 Views

மக்கள் விடுதலை முன்னணி (JVP) சார்பாக, அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரைக்கு, அமைச்சர்கள் சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், கம்மன்பில இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதேவேளை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஆட்சி அமைத்த அரசாங்கம் தற்போது மறுசீரமைப்பை யோசிப்பதற்கான சூழ்நிலை இல்லை எனவும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை எனவும், கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்திருந்ததாக கம்மன்பில குறிப்பிட்டார்.

ஆனால், கூட்டணியில் உள்ள சில சிரேஷ்ட உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி (NPP) ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வருவதாகவும், இதுவே பின்புலமாக மாறி, பிமல் ரத்நாயக்கவின் பிரதமர் பதவிக்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சபைமுதல்வராக பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளே அல்லாமல், பாராளுமன்ற உயர் அதிகாரிகளும் அதிருப்தி தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் சபைமுதல்வர் பதவிக்கு ஏற்றதல்ல. மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பனிப்போர் நிலை உருவாகியுள்ளது. இதனால்தான், சிலர் மறுசீரமைப்பை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால்தான் தற்போது அதுவொரு வெறும் யோசனையாகவே நிலைத்து விட்டது,” என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.