முட்டையின் விலை ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டதாக கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஹெட்டிபொல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தையில் விலை குறையும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகளும் நுகர்வோரும் தற்போது முட்டை கொள்முதல் செய்வதைத் தவிர்த்து வருவதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சந்தைச் சுழற்சியில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவிக்கையில்,
“தற்போதைய உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டால், ஒரு முட்டையை ரூ.18க்கு விற்பனை செய்வது சாத்தியமில்லை. நியாயமான விலை ரூ.30க்குள் இருக்க வேண்டும்.”
இதேவேளை, டிசம்பர் மாதம் வரை முட்டை தட்டுப்பாடு இல்லாமல் சந்தையில் வழங்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. அலஹகூன் தெரிவித்தார்.
அண்மையில் வெளிவந்த தகவல்களின் காரணமாக உற்பத்தியாளர்கள் நெருக்கடியில் சிக்கினால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.