(பொத்துவில் செய்தியாளர்)
பொத்துவில் குடாக்கள்ளி அல் அப்சான் பாடசாலைக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாஸித் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலையின் அலுவலக பணிகளில் இன்றியமையாத தேவையாக காணப்பட்ட இந்த இயந்திரம் பற்றிய கோரிக்கை பாடசாலை நிர்வாகத்தின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக தனது சொந்த நிதியிலிருந்து குறித்த போட்டோ கொப்பி இயந்திரத்தை வழங்கியுள்ளார்.
வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலைக்கு இன்னும் பல பௌதீக வசதிகள் தேவையாக உள்ளன என்பதை பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கையிலே, அவற்றை எதிர்காலத்தில் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சபை உப தவிசாளர் ஏ. மாபீர், சின்ன உல்லை வட்டார பிரதேச சபை உறுப்பினர் யாசீன் கியாத், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
