இலங்கை அரசின் மேகக்கணினி சேவை (Lanka Government Cloud – LGC) தற்காலிகமாக செயலிழந்ததையடுத்து பல அரசுத் துறைகள் வழங்கி வந்த இணையவழிச் சேவைகள் தடையடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட சேவைகளில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் முறைமை, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணத்தைத் தவிர) இணையவழி வாகன வரி அனுமதிப் பத்திர முறைமை (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வர்த்தகத் திணைக்களத்தின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டுக்கான சான்றிதழ் வழங்கும் இணையவழி சேவை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியக் கட்டமைப்பு, இ-உள்ளூராட்சி முறைமை, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம், மற்றும் இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை ஆகியவற்றின் இணையத்தளங்களும் அடங்குகின்றன.
இந்நிலையில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பொறியியலாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் பாதிக்கப்பட்ட கிளவுட் சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டு வர தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சான்றிதழ் பிரதிகள் தேவையுள்ளவர்கள், தகவல் முறைமைகள் வழியாக அல்லாமல் (manual), சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர் நிறுவனங்களுக்கும், கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ICTA தகவல் வழங்கி வருகிறது.
LGC சேவைகளை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு உயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், 2025 அக்டோபரில் தொடங்கிய LGC விரிவாக்கத்தின் அடுத்த கட்டம் மூலம் தற்போதைய கொள்ளளவு மற்றும் செயல்திறன் குறைபாடுகள் தீர்க்கப்படும் எனவும் ICTA தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கும் LGC சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்காக ICTA தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததுடன், இணையவழிச் சேவைகள் விரைவில் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளது.