(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அம்பாறை மாவட்டத்தின் ஒசுசல கிளைகள் இல்லாத பிரதேசங்களில் புதிய கிளைகள் தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நிந்தவூர் ஒசுசல கிளையை வேறு இடத்துக்கு மாற்றும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அக்டோபர் 10 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் மனுஷ வீரசிங்க கூறுகையில் “நிந்தவூர் ஒசுசல் கிளை பொருத்தமில்லாத இடத்தில் அமைந்துள்ளது. தினமும் 50 க்கும் குறைவான வாடிக்கையாளர்கள் மட்டுமே வருகின்றனர். எனவே, கிளையை அம்பாறை மாவட்டத்தின் ஒசுசல இல்லாத பிரதேசமொன்றுக்கு மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறுகையில் “நிந்தவூர் ஒசுசல கிளை நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை உள்ளிட்ட கிராம மக்களுக்கு பெரும் நன்மை அளித்து வருகிறது. அதனை வேறு பிரதேசத்திற்கு மாற்றுவது சரியல்ல. தேவையானால் நிந்தவூருக்குள் பொருத்தமான இடத்துக்கு மாற்றலாம்,” என வலியுறுத்தினார். மேலும், “அம்பாறை மாவட்டத்தில் ஒசுசல இல்லாத பிரதேசங்களுக்கு புதிய கிளைகளைத் திறக்க வேண்டும்.குறிப்பாக கல்முனையில் இதுவரை கிளை திறக்கப்படவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோரும் நிந்தவூர் ஒசுசலை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம் என ஒருமித்த கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், “நிந்தவூர் ஒசுசல கிளையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதே இடத்தில் அல்லது நிந்தவூருக்குள் பொருத்தமான இடத்தில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
கல்முனை ஒசுசல கிளை குறித்து, டாக்டர் மனுஷ வீரசிங்க கூறுகையில் “மிக விரைவில் கல்முனை ஒசுசல கிளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்