(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வு நேற்று (16) பிரதேச சபை மண்டபத்தில் கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அமர்வைத் தொடங்கி உரையாற்றிய தவிசாளர் உவைஸ், “மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பிரதேச சபையின் முதன்மை நோக்கம். அதற்காக வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவதே எங்கள் முன்னுரிமை” எனக் கூறினார்.
அவர் மேலும்“மக்களிடமிருந்து கிடைக்கும் வரிப்பணமும், அரசின் நிதியுதவியும் வெளிப்படையாகப் பயன்படுத்தப்படும்” என வலியுறுத்தினார்.
மழைக்காலம் நெருங்கிவருவதால், மழைநீர் தேக்கம் மற்றும் வழிந்தோடும் பிரச்சினைகளினால் எமது மக்கள் இன்னலடையாமல் பிரச்சினைகளுக்குரிய இடங்களை அடையாளம் கண்டு உடனடி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமர்வின் போது தைக்கா நகர் பிரதேசத்தில் காணப்படும் பழைய கால்நடை அறுக்கும் கட்டடத்தை (விலங்கறுமனை) அகற்றி, அதற்குப் பதிலாக அழகிய பூங்கா அமைக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் சுகாதாரமான மற்றும் கண்ணுக்கினிய சூழலை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறினார்.
மேலும், இறைச்சிக் கடைகள் சட்ட விதிகளுக்குள் இருந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்க வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபடும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை.
சமீபகாலமாக அட்டாளைச்சேனை பிரதேச சபை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவைப் பெரும்பாலும் கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தீவிர முயற்சியாலும், கெளரவ உறுப்பினர்களின் சமூகநல ஆர்வத்தாலும் , சபை செயலாளரின் ஆளுமையாலும் , நிர்வாக உத்தியோர்கள்கள் மற்றும் ஊழியர்களின் தியாகத்தாலும் சாத்தியமாகி வருகின்றன.
அவரது தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட துறைகளில் பல முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், “மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவராக தவிசாளர் உவைஸ் உருவெடுத்திருக்கிறார்.”