Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

“இயர்போன்” நவீன வாழ்க்கையின் நெருங்கிய தோழனா? மௌன விஷமா?

Posted on October 18, 2025 by Admin | 140 Views

இன்றைய நவீன வாழ்க்கையில் இயர்போன் (Earphone) என்பது ஒவ்வொருவரின் அன்றாட அங்கமாக மாறிவிட்டது. பஸ், ரயில், வீதி, அலுவலகம் என எங்குப் பார்த்தாலும் காது வழியே இசை ஒலிக்கும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. ஒருவர் தனியாகச் செல்வதோ, சிரிப்பதோ, பேசுவதோ இன்று வியப்பாக இல்லாமல் போய்விட்டது. அதன் பின்னணியில் இயங்குவது சிறியதாய் தோன்றும், ஆனால் பெரும் தாக்கம் அளிக்கும் ஒரு கருவிதான் இயர்போன்.

முன்னொரு காலத்தில் கைபேசியை நீண்ட நேரம் காதில் வைத்துப் பேசுவது சூடாகி காது பாதிக்குமென கருதப்பட்டது. இதற்கான தீர்வாக, முதலில் வயருடன் கூடிய இயர்போன்கள் அறிமுகமானன.

பின்னர், வயர் அசௌகரியமாக இருப்பதால் ப்ளூடூத் தொழில்நுட்பம் வந்தது. இன்று வயரில்லா இயர்போன்கள் மிகவும் சிறியதாக, காது கேட்கும் கருவியைப் போல காது குழியில் சொருகப்படும் அளவுக்கு நுட்பமாகிவிட்டன.

இயர்போன்கள் நமக்கு தனிமையில் துணையாகவும், ஓய்வுக்குப் பொழுதுபோக்காகவும், வேலைக்குப் பக்கவிளைவில்லாத தோழனாகவும் விளங்குகின்றன. ஆனால் இதன் அதிகப் பயன்பாடு ஒரு மௌன நஞ்சு போல நம்மை ஆழமாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

ஒலியின் அளவு மிகுந்தால் “ஒலியைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கின்றன. ஆனால், அந்த எச்சரிக்கை எத்தனை பேருக்கு முக்கியம்? பெரும்பாலானோர் அதைக் கவனிக்காமல் “சத்தமே சுகம்” என்ற தவறான எண்ணத்தில் தொடர்ந்து கேட்கிறார்கள்.

நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துவது செவிமடல் பாதிப்பு (Hearing Loss) ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் பல கூறுகின்றன.

காதின் உள்ளுறுப்பு மிகவும் உணர்திறன் மிக்கது. அதிக ஒலியால் அதிலுள்ள சிறிய நரம்புகள் அழுத்தமடைந்து மெதுவாக செயலிழக்கத் தொடங்குகின்றன.

அதிக நேரம், நாள் தோறும், மாதம் தோறும் இயர்போனை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் ஒருநாள் நம்மை “நிசப்த உலகத்துக்கு” தள்ளிவிடும் அபாயம் உள்ளது.

வீதியில் நடந்து செல்லும்போது அல்லது வாகனம் ஓட்டும் போது இயர்போன் பயன்படுத்துவது இன்னொரு பெரிய ஆபத்து.

இது கவனச் சிதறலை ஏற்படுத்தி, விபத்து அபாயத்தை பெருக்குகிறது. பல நாடுகளில் இதனை தடைசெய்யும் சட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நம்மிடம் இது இன்னும் ஒரு பழக்கமாகவே உள்ளது.

நம்முடைய செவிகள் வாழ்க்கை முழுவதும் நமக்குச் சொந்தமானவை. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு.

இயர்போன் பயன்படுத்துவது தவறு அல்ல ஆனால் அதிகப்படியான பயன்பாடே ஆபத்து.

இயர்போன் பயன்படுத்துபவர்களே நினைவில் கொள்ளுங்கள். ஒலியின் அளவை குறைத்து வைத்துக் கொள்ளுங்கள், நீண்ட நேரம் தொடர்ந்து கேட்காதீர்கள், வாகனம் ஓட்டும் போது அல்லது வீதியில் நடக்கும் போது இயர்போன் பயன்படுத்தாதீர்கள், காது வலி, கூச்சல், அல்லது கேட்கும் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இயர்போன் நம்மை உலகுடன் இணைக்கும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால் அதை உணர்வில்லாமல் பயன்படுத்தினால், நம்மை நம்மிடமிருந்தே பிரித்து விடும் கருவியாக மாறிவிடும்.

மனிதனின் வாழ்க்கை ஒலியால் நிறைந்திருப்பது அழகானது ஆனால் அதற்காக நம் செவிகளின் ஆரோக்கியத்தை இழக்க வேண்டியதில்லை.