Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட புதிய எச்சரிக்கை

Posted on October 24, 2025 by Admin | 251 Views

பலத்த காற்று, கனமழை மற்றும் கடலில் கொந்தளிப்பான நிலை ஏற்படும் வாய்ப்பு குறித்து புதிய எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (அக்டோபர் 24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களம் தெரிவித்ததாவது, வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்க வேண்டும். மேலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரை உள்ள கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாகவும் அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் அட்சரேகை 5° முதல் 18° வரை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80° முதல் 95° வரை உள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளை தற்காலிகமாக தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் படகுகள் அக்டோபர் 25க்கு முன்னர் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் கடல் நிலை அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.