Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்

Posted on October 24, 2025 by Admin | 235 Views

(அபூ உமர்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயல்படுத்த மத்திய அரசாங்கம் விசேட நிதிகளை ஒதுக்க வேண்டும் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டமானது குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் 2025.10.21ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றபோது இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், போர் காரணமாக தங்களது இயல்பான செயல்பாடுகளை இழந்துள்ளன. பல சங்கங்களின் சொத்துக்கள், காணிகள் மற்றும் கட்டிடங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி உள்ளன. இவை அனைத்தும் மக்கள் நலனுக்காக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசு அடுத்த வருட வரவு-செலவுத் திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,” என அவர் கூறினார்.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் சொத்துக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றக்கூடியவை என்றும், “அரிசி ஆலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உல்லாச விடுதிகள், வர்த்தக நிலையங்கள் போன்ற தொழில்முனைவுகள் மூலம் இச் சங்கங்களை வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும். இதற்கான திட்டமிடல் மற்றும் முன்னேற்பாடுகளை உடனே ஆரம்பிக்க வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

வர்த்தக அமைச்சின் செயலாளரிடமும், அதிகாரிகளிடமும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களைப் பெற்ற குழுத் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி இச்சங்கங்களின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகள் குறித்து விரைவில் விசேடக் கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.