Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உதுமாலெப்பை எனும் நபருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கத்தான் வேண்டுமா? யார் இந்த உதுமாலெப்பை?

Posted on October 25, 2025 by Admin | 405 Views

(அபூ உமர்)

இன்றைய அரசியலில் மக்கள் நலனுக்காக உயிரை பணயம் வைத்து செயற்படும் தலைவர்களை காண்பது அரிது. ஆனால் அந்த அரிதானவர்களில் ஒருவரும் மக்களின் இதயங்களை வென்றவரும்தான் இந்த உதுமாலெப்பை.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், தனக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் உண்மைத் தன்மையை புரியாமல் அல்லது புரிந்தும் புரியாதது போன்று பாசாங்கு செய்து அவரது வார்த்தைகளைப் பிசைந்து
“அவர் பாதாள உலகத்துடன் தொடர்புடையவரா?”
“போதை வியாபாரத்துக்கு உடந்தையா?” என்று சமூக ஊடகங்களில் கேலி செய்தனர். ஆனால் அவர்கள் அறியவில்லை இந்த மனிதர் எவ்வளவு தியாகங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டு மக்களுக்காக வாழ்ந்தவர் என்பதனை.

யார் இந்த உதுமாலெப்பை?

அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. மக்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் ஒரு சேவகர்.
அவர் இருமுறை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்து கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அபிவிருத்தியை விதைத்தவர். அவரது அபிவிருத்தியில்லாத கிராமம், அவர் திருத்தாத பாதை, அவர் பார்வையிடாத மக்கள் கஷ்டம் எதுவுமே இல்லை. களிமண் பாதைகள் கொங்ரீட் பாதைகளாக மாறியதற்குப் பின்னாலிருக்கும் அவருடைய சிந்தனையும் இரவில்லா நாட்களின் தியாகமும் மறக்கமுடியாதவை.

அவர் தன் சமூகத்தின் கேடயமாக மட்டுமல்ல அனைத்து இன மக்களுக்கும் பாதுகாப்பான கேடயமாக திகழ்ந்தவர். அதிகாரிகளுடன் பேசும்போது கூட அதிகாரத் தொனியில் அல்லாமல் மனிதநேயத் தொனியில் தான் என்றும் பேசுவார். அதனால் தான் அதிகாரிகள் அவரை என்றும் மதிப்புடன் “எங்கள் உதுமாலெப்பை சேர்” என்று அழைப்பார்கள்.

“அட்டாளைச்சேனை”அது அவர் பிறந்த இடம் மட்டுமல்ல அவரது இதயத்தின் ஓர் அங்கம். அந்த மண்ணில் அவர் காலடி பதிக்காத இடமே இல்லை என்கிறார்கள் மக்கள். அவர் மக்களைச் சந்திக்கும்போது ஒரு தலைவர் போலன்றி ஒரு உறவினர் போல தன் இதயம் திறந்து எளிமையாக பேசுவார்.

மாற்றுக் கட்சியினர் தன்னிடம் உதவி தேடி வந்தால்
“அவர் என் அன்புக்குரியவர்” என்று கூறி உதவி செய்யும் பண்புடையவர். அவர் எதிர்க்கட்சியில் இன்று இருந்தாலும் மக்களின் நலனுக்காக ஆளுங்கட்சியினரிடம் நேரடியாகச் சென்று தேவைகளை நிறைவேற்றிவைக்கும் தன்னம்பிக்கையும் அரசியல் கலையும் அவருக்குண்டு. அதனால் தான் ஆளுங்கட்சியினருக்காக மக்கள் வரிசையில் நிற்பது போலவே இவரையும் சந்திக்க மக்கள் ஆவலாக வருவதனைக் காணலாம்.

எம். எஸ். உதுமாலெப்பை அதிகாரத்திற்காக அல்ல, மக்கள் அன்பிற்காக அரசியலில் நின்றவர்.
அவர் அரசியல்வாதி அல்ல, மக்களின் துயரத்தை தன் தோள்களில் சுமக்கும் ஒரு மாமனிதர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், மக்கள் குறைகளை தீர்க்கவும் அபிவிருத்திக்காகவும் அந்த அமைச்சினை “கசக்கி பிழிந்தவர்” என்று கூறலாம்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தாங்கள்தான் மக்கள் பிரதி நிதிகள் எங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற மமதையோடு வேரூண்றி போயிருந்தவர்களின் சதிகளையெல்லாம் தவிடுபொடியாக்கி மக்களின் வலிமையினால் பாராளுமன்றம் சென்று சரித்திரம் படைத்து அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு பக்கத்தையும் எழுதியுள்ளார்.

அவர் தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்த காலத்திலும் கூட அவரது ஊர் மக்கள் ஒருபோதும் “அவன் பிழையானவன்” என்று கூறவில்லை. அதற்குக் காரணம் அவரின் நேர்மை, பண்பு, சேவை.

“இவ்வளவு நல்லவர் என்றால் பாதுகாப்பு தேவையா?” என்று கேட்பவர்களுக்கு அவர் வாழ்க்கையே பதிலாகும்.

கடந்த காலங்களில் அதிகார வெறியினால் குருடான சிலரின் அடியாட்கள் உதுமாலெப்பையை தாக்க முற்பட்ட விடயம் எல்லோரும் அறிந்ததே. இவ்வாறான அதிகார வெறி பிடித்தவர்களினாலேயே அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதையே அவர் அங்கு சுட்டிக்காட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உயிரினைப் பாதுகாப்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கடமையாகும்.

இவர் மக்களால் நேசிக்கப்படுகிறவர் அதனால் அவரது பாதுகாப்பு என்பது ஒரு அரசியல் உரிமை அல்ல அது மக்களின் பாதுகாப்பின் ஒரு பகுதி.

எம். எஸ். உதுமாலெப்பை என்பவர் அவரது ஊரான அட்டாளைச்சேனையின் பொக்கிஷம், கிழக்கு மாகாணத்தின் பெருமை, சமூகத்தின் முத்து.

சிலர் பேசி கழிகிறார்கள்…
சிலர் வாழ்ந்து கழிகிறார்கள்…
ஆனால் சிலர் மட்டுமே பிறரின் வாழ்க்கையில் ஒளியாய் மாறி அங்கேயே நிலைத்து நிற்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் எம். எஸ்.உதுமாலெப்பை.

இன்றும் பாராளுமன்றத்தில் தன் சமூகத்தின் உரிமைக்காக , எதிர்கால விடியலுக்காக குரல் கொடுக்கும் மாவீரன் இவன்.

அரசியல் என்றாலே விமர்சனம்தாம். விமர்சனம் இல்லையென்றால் அது அரசியல் கிடையாது. இதை நன்கு உணர்ந்த அரசியல் முதுசம் இவன்.

இதனையும் விமர்சனம் செய்பவர்களே, உங்களது விமர்சனம் சமூகம் சார்ந்ததா? உங்களது சுயநலம் சார்ந்ததா? என்பதனை சற்றும் சிந்தியுங்கள்