Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

மீண்டும் வெலிக்கந்தை காட்டில் பயணிகளை அவதிக்குள்ளாக்கிய அக்கரைப்பற்று டிப்போ பஸ் 

Posted on October 27, 2025 by Admin | 582 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

2025 ஒக்டோபர் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு 10.30 மணியளவில் அக்கரைப்பற்று பஸ் டிப்போவிற்கு சொந்தமான பஸ் கொழும்பு நோக்கி புறப்பட்டது. சுமார் 55 பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் கல்முனை பகுதியில் சென்றபோது திடீரென ஒளிவிளக்குகள் அணைந்தன. இருளில் சிக்கிய பயணிகள் பதட்டத்துடன் இருந்தனர்.

சாரதி பஸ்ஸை கல்முனை பஸ் டிப்போவிற்கு கொண்டு சென்றபோதும் அங்கு மின்சாதன நிபுணர்(electrician) இல்லை என கூறப்பட்டதால் பயணிகள் நடுவீதியில் துன்பத்துடன் காத்திருக்க நேரிட்டது. ஆனால் அந்த பஸ்ஸில் இருந்த ஒரு பயணியின் திறமையால் பஸ்ஸின் விளக்குகள் மீண்டும் ஒளிர பஸ் மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தைத் தொடர்ந்தது.

அந்த நிமிடங்களில் சிறு குழந்தைகளும், நோயாளிகளும், முதியவர்களும் நடு இரவில் இருளில் நடுங்கிய நிலையில் இருந்தனர். “இது சாதாரண பழுதல்ல பராமரிப்பை அலட்சியம் செய்ததின் விளைவு” என பல பயணிகள் அதிருப்தியுடன் கூறினர்.

ஆனால் துன்பம் அங்கேயே முடிந்துவிடவில்லை. நாவலடியில் சிற்றுண்டிக்காக பஸ் நிறுத்தப்பட்டபோது பஸ் மீண்டும் இயங்க மறுத்தது. சாரதி பல தடவை முயற்சி செய்தபின் பஸ் இயங்கினாலும் “ஆமை வேகத்திலும் ஏரிந்து கொண்டிருக்கும் புகையின் வாசமும்  மூக்கை அடைக்க பஸ் தவழ்ந்தது”

மறுநாள் காலை முக்கியமான நேர்காணல்களுக்கு (interview)  மற்றும் வெளிநாடு செல்ல வேண்டிய பலரும் தங்கள் கனவுகள் தகர்க்கப்படுமோ என கவலையடைந்தனர். சாரதி அவர்களது நிலையை உணர்ந்து பெரும் தைரியத்துடன் பஸ்ஸை மெது மெதுவாக வெலிக்கந்தை புகையிரத நிலையம் வரை பாதுகாப்பாக செலுத்தி இரவு 2.30 மணிக்கு நிறுத்தினார்.

ஆனால் அதற்குப் பின்னரும் பிரச்சினைகள் முடிவடைந்துவிடவில்லை. பலரிடம் புகையிரதத்தில் செல்வதற்கான பணமில்லாத நிலை. “பஸ் திடீரென பழுதடையவில்லை , பழுதடைந்த பஸ்ஸைத்தான் அக்கரைப்பற்று டிப்போ பயணத்திற்காக அனுப்பியிருக்கிறது” என பல பயணிகள் அவ்விடத்தில் பஸ் நடத்துனரிடம் வாக்குவாதமும் செய்தனர்.

“ஒரு பெரிய விபத்து நடந்திருந்தால் அந்த 55 பேரின் நிலை என்ன? அவர்களின் குடும்பங்களின் நிலை?” என கேள்வி எழுப்பிய பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அக்கரைப்பற்று பஸ் டிப்போ தற்போது “கண்களை இறுக மூடி” இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் உயிர்களின் பெறுமதியைக் கணக்கில் கொள்ளாத டிப்போ நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் உரிய உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நம் நாட்டில் அண்மையில் நடைபெற்ற பஸ் விபத்துகளினால் பல அப்பாவிகளினது உயிர்கள் பறிக்கப்பட்டதை மறந்துவிட வேண்டாம்.

பொதுமக்களின் உயிரை பாதுகாப்பதே முதன்மை என்பதனை யாரும் மறந்து விட வேண்டாம். மனித உயிரின் மதிப்பை நினைவில் கொள்ளுங்கள். தன் பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளையிடம் கேட்டுப்பாருங்கள் அதன் வலியை. உயிர்களுடன் விளையாடுவதை நிறுத்துங்கள். அலட்சியத்தை கைவிட்டுவிட்டு கடமையை சரிவர செய்யுங்கள். அலட்சியத்துடன் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.