Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த கொலை விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted on October 28, 2025 by Admin | 209 Views

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலையானது 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னால் ‘டுபாய் லொக்கா’ எனப்படும் குற்றவாளிக் குழுவின் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மாறுவேடம் எடுக்கும் வாய்ப்புகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தேக நபரின் பல்வேறு தோற்றங்களில் புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, அவை அனைத்து விசாரணை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன.

கொழும்பில் வந்த சந்தேக நபர் பின்னர் பொரளை சஹஸ்புர பகுதியில் உள்ள வீட்டு தொகுதிக்கு சென்றதாகவும் அங்கு தலைமுடியை வெட்டி, உடைகளை மாற்றி தனது தோற்றத்தை மறைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான அந்த நபர் பயணத்தின் போது பல இடங்களில் போதைப்பொருளைத் தேடியதாகவும் கூறப்படுகிறது. கொலை ஒப்பந்தத் தொகையின் ஒரு பகுதியை ஏற்கனவே பெற்ற அவர் மீதமுள்ள தொகையைப் பெற மஹரகம நகருக்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹரகம நகரில் உள்ள போதி மரம் அருகே உள்ள தொலைபேசி கடையில் மொபைல் சார்ஜர் வாங்கச் சென்றபோது டுபாயிலிருந்து வந்த ஒரு அழைப்பில் தனது மொபைல் போனை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு கிடைத்ததாகவும் விசாரணை குறிப்படுகிறது.

அதன்பின் கடையிலிருந்து வெளியே வந்த சந்தேக நபர் கண்காணிப்பில் இருந்த அதிகாரிகளின் கண்களுக்கு மத்தியிலும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அவரைப் பின்தொடர்ந்த கண்காணிப்பு அதிகாரி ஒருவர், அவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதை உறுதிப்படுத்தியதும் வாட்ஸ்அப் குழுமம் வழியாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்மீது தற்போது 5 திருட்டு வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், மேலும் ஆயுதம் வைத்திருந்தமைக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.