Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றும் அதிகாரம் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு உள்ளதா?

Posted on October 29, 2025 by Admin | 419 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

ஒரு சமூகத்தின் எதிர்காலம் அவ் ஊரிலுள்ள பாடசாலையின் ஒழுக்கத்திலும் கண்ணியத்திலும் இருக்கிறது. ஆனால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நிகழ்ந்த சம்பவம் அந்த கல்வி மரபையும் அதிபர்களின் கண்ணியத்தையும் வலுவிழக்கச் செய்துள்ளது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரு குழுவினர் செயற்பட்டு வருகின்றனர் ஆனால் அதிபரோ அவ்வாறான குற்றங்கள் எதனையும் தான் செய்யவில்லை என்று மறுத்தும் வருகின்றார்.

எது எவ்வாறாக இருந்தாலும் தேசிய பாடசாலையின் பிரச்சினையை ஊரிலுள்ள படித்த, பக்குவமான, ஊர்நலனுள்ள, பண்பானவர்கள் ஒன்று சேர்ந்து அதிபரையும் அதிபருக்கு எதிராக குற்றங்களை முன்வைக்கும் தரப்பினரையும் அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கி ஊரின் நலன்சார்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் அவசியமாகும்.

இதனை விட்டுவிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் 2025.10.28ம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரிடம் சென்று தாங்கள் ஏதோ கல்வி அமைச்சிலிருந்து வந்த அதிகாரிகள் போன்றும் அதிபர் பல குற்றங்களை செய்து நிரூபிக்கப்பட்ட குற்றவாளி என அவ்விருவரும் நினைத்துக் கொண்டு நேர்காணல் செய்து அதனை முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ள கேவலமான செயல் அட்டாளைச்சேனை பிரதேச மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஊரின் கெளரவத்தை குழி தோண்டி புதைத்துள்ளதுடன் ஊரின் மானத்தினை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றம் பெற்று செல்லுங்கள் என அவரை நிர்ப்பந்திக்கும் அதிகாரத்தினை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கொடுத்தது யார்? கல்வியில் தன்னை விட குறைந்த ஒருவர் பாடசாலையின் அதிபரை நோக்கி விரலைச் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறுவது எவ்வளவு கேவலமானது.

இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல ஒரு அதிபரின் மரியாதையை அவமதிக்கும் நிலையை ஊரில் தோற்றுவித்துள்ளது. இவ்வாறான கீழ்த்தரமான கலாசாரத்தை அட்டாளைச்சேனை ஊர் பாடசாலைகளில் தோற்றுவிக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது.

கல்வியை கற்று பல போட்டிப் பரீட்சைகளை எதிர்கொண்டு அவற்றில் வெற்றி கொண்ட ஒருவர்தான் பாடசாலையின் அதிபராக வர முடியும். அதிபரை மக்கள் வாக்களித்து தெரிவு செய்வதில்லை என்பதனை அவ்விருவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு கல்வித் தகைமை அவசியமல்ல ஆனால் அரசியல்வாதிக்கு கல்வி இருந்தால் சிறப்பு ஆனால் பாடசாலை செய்வதற்கு கல்வி அவசியம் என்பதனை அவ்விருவரும் புரிய வேண்டும். இவர்கள் இருவரினதும் செயலை ஊரை நேசிக்கின்ற யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பாடசாலை என்பது அரசியலின் அரங்கம் அல்ல. ஒழுங்கான அரசியலை கற்றுக் கொடுக்கின்ற கருவறை. கல்வி, ஒழுக்கம், மரியாதை ஆகியவற்றின் ஊற்று பாடசாலையாகும்.

அந்த அதிபர் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவை நியாயமான வழிமுறைகளில் கெளரவமாக விசாரிக்கப்படவேண்டும். அதற்குத்தான் சட்டம் உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவரை “நீ குற்றவாளி” எனச் சொல்லும் தோரணையில் வினாக்களை தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஊரின் கல்விச் சூழலைக் களங்கப்படுத்தும் செயலாகும்.

இந்த இரு உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து சில கேள்விகள் அட்டாளைச்சேனை பிரதேச மக்களிடையே தற்போது எழுந்துள்ளன…

  1. இந்த இரு உறுப்பினர்களும் எந்த நோக்கத்திற்காக பாடசாலைக்குள் நுழைந்தார்கள்?
  2. ஏன் அதிபரை குற்றவாளி போன்று அதிபரை பேச விடாமல் கேள்விகளை தொடுத்தார்கள்?
  3. யாருடைய திட்டத்தில் இவ்விருவரும் பாடசாலைக்கு வந்தார்கள்?
  4. ஊர் மீதும் பாடசாலை மீதும் பற்று இருந்தால் அதிபருடன் கலந்துரையாடியதை ஏன் ஒளிப்பதிவு செய்தார்கள்?
  5. ஒளிப்பதிவு செய்ததை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதன் நோக்கம் என்ன?அது பொது நலனுக்காகவா? அல்லது அரசியல் விளம்பரத்திற்காகவா? அல்லது முகப்புத்தகத்தில் உள்ள மோகமா?
  6. ஒரு அதிபரிடம் எவ்வாறு பண்பாக பேச வேண்டும் என்பதைக்கூட தெரியமால் கொச்சை வார்த்தைகளால் அதிபரை கேவலப்படுத்தியதன் நோக்கம் என்ன?இது எந்த நாகரிகத்தின் பிரதிபலிப்பு?
  7. ஒரு பிரதேச சபை உறுப்பினரின் அதிகாரம் என்ன? இவர்களுக்கான அதிகார வரையறையை யாரும் இவர்களுக்கு முறையாக சொல்லிக் கொடுக்கவில்லையா?அல்லது அதனை விளங்கும் திறன் அற்றவர்களா இவர்கள்?

ஊர் நலன் விரும்பி தான் வந்ததாக கூறும் அவ் உறுப்பினர் அதிபரை நோக்கி தொடுத்த வினாக்களில் சில வருமாறு…..

  1. ஊரில் ஒரு குழு அதிபரை விரும்பவில்லையாம் அதனால் நீங்கள் இடமாற வேண்டும்.
  2. உங்களை post officeக்கு போகச் சொல்லலேயே பாடசாலைக்கு தானே போகச் சொல்றாங்க அப்ப போங்களன்.
  3. நீங்க ஆளுமை இல்லாதவர் என்று சொல்றாங்க அப்ப விட்டு கொடுங்களேன்.
  4. உங்களுக்கு சிலை வைக்கப்போறல்ல. எங்களுக்கு ஒரு முடிவு தரனும்.
  5. வெளியில இருந்து பார்வையாளரா பார்ப்பமே.
  6. நல்ல principalஅ போட்டு schoolஅ நடத்தட்டும்
  7. மீனோடைக்கட்டு பாடசாலைக்கு உங்கள அதிபரா எடுக்க நான் ஒத்தக்கால நிப்பன்.
  8. ஆளுமை எல்லாருக்கும் வராதுதானே?
  9. பொதுமக்களின் கருத்துப்படி நீங்க ஆளுமையில்லாத ஒரு ஆள்.

இவரது கேள்விகளை எல்லாம் தொகுத்து பார்க்கின்ற போது அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதுதான்.

எவ்வளவோ படித்த பண்பான, ஆளுமையுள்ள கல்விமான்கள் உள்ள ஊரான அட்டாளைச்சேனையில் யாருமே செய்ய முற்படாத ஒரு விடயத்தை இவர்கள் இருவரும் முந்தியடித்து சென்று ஒளிப்பதிவு செய்து அதனை முகப்புத்தகத்தில் பதிவேற்றிய சம்பவம் முழு அட்டாளைச்சேனை சமூகமும் இவர்கள் இருவரின் மீதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர்களது கல்வி புலத்தையும் சிந்திக்க வைத்துள்ளது.

பிரதேச கழிவுகளை ஏற்றிச் செல்கின்ற இயந்திர ஊழியர்களை இடை மறித்து அவர்களை அதட்டும் வகையில் பேசி அதனை நேரலையாக காண்பிப்பது போன்றதல்ல இது என்பதனை முதலில் இவர்கள் புரிய வேண்டும்.

ஒரு பிரதேச சபை உறுப்பினரின் கடமைகளை சரியாக அவர்களுக்கு புரிய வைப்பது அட்டாளைச்சேனை மக்களின் கடமை போன்று தற்போது மாறியுள்ளது.

இவர்களது ஒளிப்பதிவின் பதிவேற்றம் முழு அட்டாளைச்சேனை கல்விச் சமூகத்தையும் இன்று தலை குணிய வைத்துள்ளதுடன் நாம் பிழையானவர்களை பிரதேச சபைக்கு உறுப்பினராக அனுப்பிவிட்டோமோ என மக்கள் எண்ணும் அளவிற்கு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிரதேச சபை உறுப்பினர் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்ற செயற்பட வேண்டும் அதை விட்டுவிட்டு “கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்” போன்று நினைத்தவர்கள் எல்லாம் பாடசாலைக்குள் நுழைவதும் திருடனை பிடிக்க வந்த காவல் அதிகாரி போன்று அதிபரை விசாரணை செய்வதும் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது. ஊரின் கல்விச் சூழலை அரசியலின் கருவியாக மாற்ற முயலும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் எதிர்க்க வேண்டும்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அவ் ஊரின் பெருமை. அதனை அரசியல் அரங்கமாக மாற்றுவது அவ் ஊரினது கல்விச் சமூகம் செய்கின்ற வரலாற்று தவறாகும்.

அட்டாளைச்சேனையானது பண்பான கல்வியியலாளர்களினால் நிரம்பி வழிகின்ற ஒரு ஊர். கல்வியை போதித்து முழு உலகிற்கும் மக்களை அனுப்பும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, தேசிய கல்வியியல் கல்லூரி, கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி போன்ற நீண்டகால வரலாற்றைக் கொண்ட கல்வி நிலையங்கள் உள்ள ஊரில் இப்பிரச்சினையை தீர்க்க அட்டாளைச்சேனை கல்விச் சமூகம் முன்வர வேண்டும்.

யாருடைய திட்டங்களுக்கும் அடிமைகள் போன்று யாரும் இயங்காதீர்கள். அதிபர் மீது குற்றம் இருந்தால் அதனை முறையாக கையாளுங்கள். உரிய சட்ட நடவடிக்கை எடுங்கள். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் அதன் பயனை அனுபவிக்க வேண்டும். முறை தவறி நடந்து ஊரையோ, பாடசாலையையோ , எம் சமூகத்தையோ கேவலப்படுத்தி விடாதீர்கள். ஊரின் கெளரவத்தை பாதுகாப்பது அட்டாளைச்சேனை கல்விச் சமூகத்தின் தலையாய கடமையாகும்.