மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை நேற்று (மே 25) புணானையில் சந்தித்து, தங்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதியில், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் பெரும் நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர். சிறிய வள்ளங்களைப் பயன்படுத்தும் இக்கொள்ளையர்கள், ஆழ்கடலில் பொருத்திய வலைகளில் சிக்கும் மதிப்புள்ள மீன்களை வலைகளுடன் கூடியே பிடித்து செல்வதால், இத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், தங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கோரினர்.
இந்த சந்திப்பில், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பிரதித் தலைவரும் எம்.பி. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதித் தேசிய அமைப்பாளரும் எம்.பி. எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் எம்.பி. எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், மீனவர் சங்க தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சம்மேளன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.