Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான புகையிரத சேவையை விரைவில் விஸ்தரிக்க வேண்டும்: எம். எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

Posted on June 6, 2025 by Admin | 513 Views

(அபூ உமர்)

1864ஆம் ஆண்டு இலங்கையில் புகையிரத சேவை தொடங்கப்பட்டாலும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய பிரதேசமான மட்டக்களப்பு – பொத்துவில் இடைப்பட்ட பகுதி இன்று வரை புகையிரத சேவையிலிருந்து விலக்கப்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

நேற்று (05.06.2025) நடைபெற்ற நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் விமான சேவை அமைச்சுத் துறையின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பொத்துவில் போன்ற சுற்றுலா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கிழக்கு மக்களின் பயண வசதிக்கும், தேசிய இணைப்புக்கும் இது இன்றியமையாத திட்டம் எனக் கூறினார்.

அந்த வகையில், வெளிநாட்டு நிதி ஆதரவுடன் மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத பாதையை உருவாக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

1992ஆம் ஆண்டு, இந்த திட்டத்துக்கான முயற்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். மன்சூர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஈரான் நிபுணர் குழு வருகை தந்து திட்ட வரைபடம் தயாரித்தபோதும், 1994ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் நிறைவேறாமல் கைவிடப்பட்டது.

மட்டக்களப்பு – பொத்துவில் பகுதிகளில் நீண்ட காலமாக வசிக்கும் மக்கள், இந்த சேவையின் இல்லாமையைத் தொடர்ந்து அனுபவிக்கின்ற பயண சிக்கல்கள் குறித்து முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், மாத்தறை – கதிர்காமம் புகையிரத சேவை கடந்த அரசால் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, மாத்தறை – மட்டக்களப்பு வரையிலான ரயில் பாதையையும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டின் தேசிய போக்குவரத்து அதிகார சபையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 147 ரயில் நிலையங்கள் உள்ளன, மேலும் தினமும் 1.24 இலட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஒட்டி, கிழக்குப் பகுதியில் இந்த சேவையை விரிவுபடுத்தாமல் இருப்பது சமநீதி இல்லை என அவர் வலியுறுத்தினார்.