Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்றி கைதி விடுதலை – ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சி

Posted on June 7, 2025 by Admin | 285 Views

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ. எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடுமையான முறைகேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வெளியாகிய செய்திகளை ஜனாதிபதி செயலகம் பாரிய கவனத்தில் எடுத்துள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 34(1)ன் கீழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகும். இந்தச் சட்டப்பிரிவின் அடிப்படையில், சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளர்கள் பரிந்துரை செய்யும் கைதிகளின் பட்டியல் முதலில் நீதியமைச்சு வழியாக பரிசோதிக்கப்படுகிறது. அதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

வெசாக் பண்டிகை பொது மன்னிப்புக்காக 2025 மே 6 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் கடிதம் (06/01/யோஜித /ஜே.பி.சாம/வர்:/05-12/2025) சுமார் 388 கைதிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலை உள்ளடக்கியிருந்தது. இதில் நிதி மோசடி வழக்கில் சிறையிலிருந்த டபிள்யூ. எச். அதுல திலகரத்ன என்பவர் பெயர் எங்கும் இடம்பெறவில்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமான முறையில் பொது மன்னிப்பின்றி விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, ஜனாதிபதி செயலகம் குற்றப் புலனாய்வுத் துறையில் நேற்று (ஜூன் 6) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்துள்ளது.

“ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத கைதியின் விடுதலை” என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து, தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.