Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நிதி நிறுவன முன்னாள் முகாமையாளர் வெசாக் பொது மன்னிப்பில் விடுதலை – சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்!

Posted on June 7, 2025 by Admin | 413 Views

முன்னாள் நிதி நிறுவன முகாமையாளர் டபிள்யூ. எம். அத்துல திலகரத்னவின் விடுதலை குறித்து, சிறைச்சாலை திணைக்களம் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

4 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தண்டனை பெற்றிருந்த திலகரத்ன, வெசாக் பௌர்ணமி தின ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட மன்னிப்பு அல்ல என்றும், வழக்கமான நிபந்தனைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த வாய்ப்பை பெற்றதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்ததாவது, திலகரத்ன 386ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டு, ரூ. 2 மில்லியன் இழப்பீட்டுடன் தண்டனை பெற்றிருந்தார். அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், வெசாக் மன்னிப்பு விதிகளின் கீழ் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் திலகரத்ன விடுதலையடைந்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, திலகரத்னவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை அம்பலத்தில் கொண்டு வந்தார். தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குள் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கையின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் விளக்கவேண்டும் என வலியுறுத்தினார். மேலும், திலகரத்ன எதிர்கொள்ளும் பிற வழக்குகள் குறித்து தெளிவாக விளக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இவை குறித்து நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், அரசாங்கத்தினால் எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.