Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அம்பாறை மாவட்டத்தில் 27½ ஏக்கர் கரும்பு தீக்கிரை – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

Posted on June 20, 2025 by Admin | 264 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீண்ட காலமாக இழப்புகள் அடைந்து வருவதாகவும், அவர்களது வாழ்வாதாரம் தகர்ந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

19.06.2025 அன்று பாராளுமன்ற கட்டடத்தில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உதுமாலெப்பை, ஹிங்குரானை சீனித் தொழிற்சாலை 51% அரசுக்கும், 49% தனியாருக்கும் சொந்தமாக உள்ளதுடன் , விவசாயிகள் தொடர்ந்தும் நஷ்டமடைந்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த மே 30ஆம் திகதி, அம்பாறை மாவட்டத்தில் 27½ ஏக்கர் கரும்பு பயிர்கள் தீப்பற்றி அழிந்துள்ளதாகவும், அதற்கான நஷ்டஈடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “இக்காணிகள் காப்புறுதி செய்யப்பட்டிருந்தாலும், அதிலிருந்து நஷ்டஈடு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நிதி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்” என அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் தங்களது 13 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கான இலாபகரமான பயிர்ச் செய்கையை உறுதி செய்ய, மாற்றுத்திட்டங்களை அரசு முன்வைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட செயற்பாடுகளை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சீனிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்கு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உத்தரவிட்டார். அதற்கான பதிலில், தீக்கிரை உண்மையென உறுதிப்படுத்தினார். தற்போது காப்புறுதி இருந்தாலும் நஷ்டஈடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பயிர்களுக்கு ஏற்ற காப்புறுதித் திட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்