இலங்கையில் தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த முறையில் ஹேக் செய்யப்பட்ட நபரின் பெயரிலும், அவரைப் போலவே நடித்து, அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மெசேஜ் அனுப்பி பணம் கோரும் மர்ம நபர்கள் செயல்படுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள சிலர், ஹேக் செய்த நபர்கள் வழங்கும் வங்கி கணக்குகளுக்கு ஒரு இலட்சம் ரூபாயைத் தாண்டிய அளவில் பணம் அனுப்பிய சம்பவங்களும் புகாரளிக்கப்பட்டுள்ளன.
இந்த அபாயகரமான செயல்களை தடுக்கும் நோக்கில், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டு தங்கள் கணக்குகளை மீட்டெடுக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஹேக்கிங் சம்பந்தமான எந்தவொரு முறைப்பாட்டையும் பொதுமக்கள் https://telligp.police.lk என்ற இணையதளத்தின் மூலம் மின்னணு குற்றப்பிரிவுக்கு தெரிவிக்கலாம்.
இந்த வகை மோசடிகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும், எந்தவொரு சந்தேகமான நிதி கோரிக்கைகளுக்கும் பதிலளிக்காமல் உடனடியாக சோதனை செய்ய வேண்டும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.