அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் ஒருவருக்கு எதிராக ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில், மீண்டும் வாக்குமூலம் அளிக்க அனுமதி தருமாறு சந்தேகநபர் முன்வைத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நேற்று நிராகரித்தார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, சந்தேகநபர் நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட வைத்தியரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய்யான தகவல்களை பரப்ப முயற்சி செய்கிறார் எனக் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது, “சந்தேகநபர் கடந்த நாட்களில் நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான மற்றும் சாசனத்துக்கு மாறான அறிக்கைகளை தெரிவித்திருக்கிறார். இது நீதிமன்றத்தின் நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் செயல்” என்றார்.
இந்நிலையில், வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட வைத்தியரின் ஸ்மார்ட்போனை மீட்ட போலீசார், அதனை அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி, அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை, ஜூலை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மேலும், அவரது டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டு, அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என பொலீசார் தெரிவித்துள்ளனர்.