புதிய கல்வி சீர்திருத்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று பிரதமரும் கல்வி, உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்காக கடந்த வாரம் காலியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், “பாடசாலை மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, ஆசிரியர்களின் கல்வித் தகுதியும், தொழில்முறை பயிற்சியும் முக்கியம்,” எனத் தெரிவித்தார்.
“ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக முறையான பயிற்சி பெற வேண்டும். மாணவர்களை வழிநடத்தும் மிக முக்கியமான பொறுப்பை வழக்கும் ஆசிரியர்களுக்கு, கற்றல் மற்றும் கற்பித்தலில் சிறந்த அனுபவமும், அறிவும் இருக்க வேண்டும். அதனாலேயே பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாகும்,” என்று அவர் கூறினார்.
மேலும், கல்வி நிர்வாகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை செயல்படுத்தும் நோக்குடன், ஒரு புதிய கல்வி பேரவையை நிறுவுவதற்கான முன்மொழிவையும் தாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“பாடத்திட்ட மாற்றங்கள் மட்டுமன்றி, பயிற்சி, நிபுணத்துவம் என அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் தேவை. அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் பிரதமர் ஹரிணி.