அம்பாறை பொது வைத்தியசாலையில் தமிழ் மொழி மூலமாக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளைச் செய்யும் பதிவாளர் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரி, இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினரான கே.ல். சமீம், இன்று (24.07.2025) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வ மனுவை கையளித்தார்.
இந்த விடயம் கடந்த 16 மே 2025 அன்று இடம்பெற்ற இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. ஆனால், அதற்கான முடிவு எட்டப்படாத நிலையில், 27 மே 2025 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலாளரினால் இது முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய சந்திப்பில், மாவட்ட அரசாங்க அதிபரிடம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கே.ல். சமீம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தமிழ் மொழி மூலம் பதிவுகள் நடைபெற வேண்டும் என்பதையும், இது அவரது உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முக்கிய வாக்குறுதிகளுள் ஒன்றாக இருப்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ் பேசும் பொதுமக்களுக்கு சீரான சேவைகள் வழங்கும் வகையில் நிர்வாகம் முன்னேறலாம் என்பது அவரின் நோக்கமாகும்.